தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்ய நந்திதா உயிரிழந்தார்.
செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜி சயன்னா காலமானதைத் தொடர்ந்து அவரது மகள் லாஸ்ய நந்திதாவுக்கு (37)அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ரெங்கா ரெட்டி மாவட்டம் அமீன்பூர் மண்டலத்தில் இன்று அதிகாலை அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதியது. இதில் நந்திதா மற்றும் ஒட்டுநர் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதனையடுத்து நந்திதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நந்திதா மறைவுக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.