திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், முக்கிய விழாவின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிற்ப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.
சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளைச் சுற்றி வலம் வந்த தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. பின்னர் தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது.
தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு முதலே திருச்செந்தூர் கோயில் மற்றும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.அதிகாலையில் கடலில் நீராடிய பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் 11-ம் திருநாளான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 12-ம் திருநாளான நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.