தமிழகத்தில் மக்களவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேற்று மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலகட்சிகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்தித்தனர்.
பிற்பகலில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தனர். பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள 10 அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கி, அவர்களது கருத்துகளை கேட்டறிந்தனர். மக்களவை தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பெரும்பாலும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.