வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர் பயிற்சி மேற்கொண்டது.
வடகொரியாவை பொறுத்தவரை, உலகில் மர்மமான நாடாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது. மேலும், அந்நாட்டில் கடுமையான மற்றும் வித்தியாசமான சட்ட விதிகள் கையாளப்படுகிறது. அந்நாட்டை அதிபர் கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போல ஆட்சி செய்து வருகிறார்.
இந்நாடு கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இதனால், தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா மற்றும் ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனை கண்டு கொள்ளாத தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த போர் பயிற்சியில், போர் விமானங்களை இடைமறித்து தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டு போர் பயிற்சியில் அதிநவீன விமானங்கள் ஈடுபட்டதாக தென்கொரிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.