ஒரு பெண் முதல்வர் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி என்ற கிராமம். இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் பெண்களை பாலியல்வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தலைமறைவான ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வலியுறுத்தி அங்கு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மேற்கு வங்க மாநிலம் போட்டோவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சந்தேஷ்காலியில் அப்பாவி மக்களை குறிவைக்கும் குண்டர்களை கட்டுப்படுத்த எதுவும் செய்யவில்லை என்றார்.
மேற்கு வங்க அரசு எதையும் செய்யாமல் இருப்பதுதான் வேதனையான விஷயம். ஒரு பெண் முதல்வரின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த கேள்விகள் எழுவதாகவும் அவர் கூறினார்.