புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் தொடர்பான புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின்படி, கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கும்பல் வன்முறை என்பது அருவருப்பான குற்றம். எனவே, கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்க புதிய சட்டத்தில் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய சட்டத்தின்படி, விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை 180 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்த முடியாது. விசாரணை நிலுவையில் இருந்தாலும், நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
45 நாள்களுக்கு மேல் தீர்ப்பை நீதிபதியால் ஒத்திவைக்க முடியாது. ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் குற்ற வழக்குகளில் தடயவியல் நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.