இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் 73 ரன்கள் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வால் பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களும், அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் 219 ரன்களை எடுத்துள்ளது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 8 பௌண்டரீஸ் 1 சிக்சர் என மொத்தமாக 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த மூலம் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 17 வருட சாதனையை முறியடித்தார். மேலும் இந்த தொடரில் இதுவரை ஜெய்ஸ்வால் 618* ரன்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்ற சௌரவ் கங்குலியின் 17 வருட சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால் புதிய தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிக்ஸர் மழை பொழிந்து வரும் ஜெய்ஸ்வால், இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்தார்.
இதன் மூலம் 16 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத வீரேந்தர் சேவாக்கின் டெஸ்ட் போட்டி சாதனையையும் உடைத்தார் ஜெய்ஸ்வால்.
அதாவது ஜெய்ஸ்வால் இந்த ஆண்டில் இதுவரை டெஸ்ட் தொடரில் 23 சிக்சர்களை அடித்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால்.
முன்னதாக 2008ஆம் ஆண்டு வீரேந்தர் சேவாக் 22 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். 2022இல் ரிஷப் பண்ட் 21 சிக்ஸர்கள் வரை அடித்து அந்த சாதனையை நெருங்கினாலும் அவரால் அதை முறியடிக்க முடியவில்லை.
அதே போல தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 618 ரன்கள் குவித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். அதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் மட்டுமே அதை செய்து இருந்தனர். அதேபோல் ஒரே தொடரில் 600 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
முன்னதாக 1970 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிராக சுனில் கவாஸ்கர் 700 ரன்களை அடித்து இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது ஜெய்ஸ்வால் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.