சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை யானைகள் தாக்கும் அபாயம் உள்ளதால், பாலராம்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வனங்களும், உயர்ந்த மலைகளும் சூழ்ந்த பகுதி சத்தீஸ்கர். மற்ற மாநிலங்களைவிட இந்த மாநிலத்தில், யானைகள் அதிக அளவில் இருப்பதால், அவை விவசாய நிலங்களில் புகுந்து தங்களுக்குத் தேவையான உணவுகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் வயல்வெளிகளையும், பயிர்களையும் யானைகள் அழித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் யானைகள் தாக்கியதில், 65 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர். யானைகளுக்கும் மனிதருக்கும் இடையே நடந்த மோதலில் 14 யானைகள் உயிரிழந்துள்ளன.
மனித உயிரிழப்பு, பயிர் சேதம் மற்றும் சொத்து இழப்பு என மாநில அரசு இதுவரை சுமார் ரூ.75 கோடிக்கு மேல் இழப்பீடாக வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பாலராம்பூர் மாவட்டத்தில் வத்ராப் நகரில் உள்ள ககனேசாவில் 10 நாட்களாக மூன்று யானைகள் சேர்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு மிக அருகில் இருந்த வீட்டையும் யானைகள் இடித்த தள்ளி தரைமட்டமாக்கியுள்ளது.
இதனால், யானைகள் அச்சுறுத்தல் காரணமாக, ஐந்து பள்ளிகளுக்கு, இரண்டு நாட்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார்.