பெண்களின் சபரிமலை என போற்றப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில், ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
குறிப்பாக, மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பொங்கல் திருவிழா நடைபெறும். சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியை, ஆற்றுக்கால் பகவதி அம்மனாகக் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வருட பொங்கல் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பிப்ரவரி 25-ம் தேதியான நாளை காலை 10.30 மணிக்கு கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். பிற்பகல் 2 மணிக்குப் பெண்கள் பொங்கலிட தொடங்குவர்.
26-ம் தேதியான நாளை மறுநாள் காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டுத் திருவிழா நிறைவு பெறுகிறது.