சுதர்சன் பாலத்தை தாம் கட்ட வேண்டும் என பகவான் கிருஷ்ணர் முடிவு செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் வகையில், கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார்.
அப்போது, குஜராத் முதலமைச்சராக இருந்த போது, சுதர்சன் சேது திட்டம் தொடர்பாக அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்தேன்.ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. அந்த பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. சுதர்சன் பாலத்தை தாம் தான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
நான் என்னுடன் ஒரு மயில் இறகை எடுத்துச் சென்று அதை அங்கே அளித்தேன். எனது கனவு இன்று நனவாகியதால் என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது என்றும் பிரதமர் கூறினார்.
புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்கியபோது, எதிர்க்கட்சிகள் என்னைக் கேலி செய்தன. ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது.
நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் மக்களுக்காக எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தை சுற்றியே இருந்தது. ஊழலை வைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்று சிந்திப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.
2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. 2014-ல் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது நாட்டைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தேன்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தற்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரம் ஆக உருவெடுத்துள்ளது. அதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
செனுப் பாலம், மும்பையில் உள்ள அடல் சேது, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தூக்கு பாலம் போன்ற பொறியியல் அதிசயத்திற்கு சுதர்சன் சேது ஒரு எடுத்துக்காட்டு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.