ஐஐடி மெட்ராஸ் மற்றும் திஷ்டி ஃபரிதாபாத் ஆராய்ச்சியாளர்கள் கருவின் வயதைக் கண்டறிய முதல்முறையாக இந்திய மக்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஃபரிதாபாத் இணைந்து பிறப்பு விளைவுகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி பல்துறைக் குழு- டிபிடி இந்தியா முன்முயற்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம், மூன்றாம் மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவின் வயதைத் துல்லியமாக நிர்ணயிக்க முதன்முறையாக இந்திய மக்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளன.
கர்ப்பிணிகளை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளவும், பிரசவத் தேதிகளை சரியாக நிர்ணயிப்பதற்கும் துல்லியமான ‘கர்ப்பகால வயது’ அவசியமாகிறது. ‘கர்ப்பிணி-ஜிஏ’ என்றழைக்கப்படும் இந்த நவீன கர்ப்பகால வயது மதிப்பீட்டு மாதிரி இன்னும் மேம்படுத்தப்பட்டு இந்தியத் தரவுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
கருவின் வயது (கர்ப்பகால வயது அல்லது ஜிஏ) மேற்கத்திய மக்களுக்காக உருவாக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி தற்போது தீர்மானிக்கப்பட்டு வருகிறது.
இந்திய மக்களில் கருவின் வளர்ச்சியில் மாறுபாடுகள் இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தின் கடைசி நாட்களில் கணக்கீடுகளைப் பயன்படுத்தும்போது தவறாக மாறிவிட வாய்ப்புள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட ‘கர்பிணி-ஜிஏ2’ இந்திய மக்களுக்கான கருவின் வயதைத் துல்லியமாக மதிப்பிடுவதுடன், ஏறத்தாழ மூன்று மடங்கு பிழைகளைக் குறைக்கிறது.
மகப்பேறு மருத்துவர்கள், சிசு பராமரிப்பியல் மருத்துவர்கள் ஜிஏ மாதிரியைப் பயன்படுத்தி குழந்தைப் பராமரிப்பை மேம்படுத்தலாம். இதனால், இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதங்களைக் குறைக்க முடியும்.
இந்த ஆராய்ச்சிக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே கூறுகையில், “கர்ப்பிணி என்பது உயிரி தொழில்நுட்பத் துறையின் முதன்மையான திட்டமாகும்.
கர்ப்பகால வயதை மதிப்பிடுவதற்கான மக்கள் தொகை சார்ந்த மாதிரிகளை உருவாக்குவது பாராட்டத்தக்கது. இதுபோன்ற மாதிரிகள் நாடு முழுவதும் மதிப்பிடப்பட்டு வருகின்றன” என்றார்.
இதற்கான ஆராய்ச்சியை ஐஐடி மெட்ராஸ் உயிரித் தொழில்நுட்பத் துறையின் பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளி இணைப் பேராசிரியர் டாக்டர் ஹிமான்சு சின்ஹா, கர்பிணித் திட்ட முதன்மை ஆய்வாளரும் திஷ்டி-யின் மதிப்புமிகு பேராசிரியருமான டாக்டர் ஷின்ஜினி பட்நாகர் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். அவர்களின் கண்டுபிடிப்புகள் மதிப்புமிக்க சர்வதேச மதிப்பாய்வு இதழான லான்செட் ரீஜனல் ஹெல்த் சவுத்ஈஸ்ட் ஆசியா-வில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பிரிக்-திஷ்டி என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக் கவுன்சிலின் கல்வி நிறுவனமாகும்.
கடுமையான மருத்துவ ஆராய்ச்சித் திறனை உருவாக்குவதன் மூலமும், கண்டுபிடிப்புகளை ஆய்வகத்தில் இருந்து நோயாளிகளுக்கு உதவும் விதமாக மாற்றுவதன் மூலமும் அடிப்படைக் கண்டுபிடிப்புகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான ஊக்கியாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஆய்வின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் ஹிமான்சு சின்ஹா விளக்கினார். “இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அடிமட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் உள்ள சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஐஐடி மெட்ராஸ் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
எங்களது மருத்துவக் கூட்டாளியான ‘திஷ்டி’யுடன் இணைந்து சாதகமற்ற பிறப்பு விளைவுகளைக் கணிக்கும் கருவிகளை உருவாக்குவதற்காக, மேம்பட்ட தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு/இயந்திர மொழி நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். மேற்கத்திய மக்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மாதிரிகளுக்குப் பதிலாக கணிசமான அளவில் சிறப்பாகச் செயல்படும் துல்லியமான ஜிஏ மாதிரிகளை உருவாக்குவதே இதன் முதல்படியாகும்” எனக் குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ்-ன் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் பாஷ் மையம் , ஐஐடி மெட்ராஸ்-ன் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் சிஸ்டம்ஸ் மருத்துவ மையம் ஆகியவற்றால் கூடுதல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.