சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நக்சலைட்டுகள் மறைந்திருந்து அவ்வப்போது, காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்துகின்றனர். இதில், இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில், சத்தீஸ்காரின் கான்கேர் மாவட்டத்தில் போம்ரா-ஹுர்தராய் கிராமங்களுக்கு இடையே உள்ள மலையில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள், பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
இதை அடுத்து, மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் மேலும், சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.