தான்சானியா நாட்டின் அருஷா நகரில் நகரில் ஏற்பட்ட கோர விபத்தில், 7 வெளிநாட்டு தன்னார்வ ஆசிரியர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அருஷாவில் உள்ள பள்ளி ஒன்றில், அமெரிக்கா, கென்யா, டோகோ, மடகாஸ்கர், புர்கினா பாசோ, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய 7 நாடுகளில் இருந்து தலா ஒரு தன்னார்வ ஆசிரியர் என 7 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.
பள்ளி முடிந்தவுடன் ஆசிரியர்கள் அனைவரும் வழக்கம் போல் வேனில் ஏறி தங்கள் வீடுகளை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக சென்று, எதிரே வந்த 3 வாகனங்கள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 7 வெளிநாட்டு தன்னார்வ ஆசிரியர்கள் உட்பட 15 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் மேலும் 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.