பிரதமர் மோடி பல்லடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்குத், தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் கூட்டத்தைத் திரட்டுவதற்கும், பிரமாண்ட ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொதுக்கூட்ட மேடை தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தமிழகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்களைப் அவர் தொடங்கி வைக்கிறார். பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா மாநாடு நாளை நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 3மணிக்கு கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து மாதப்பூரில், மாநாடு நடைபெறும் மைதானத்தில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் அளவிலான பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்வாரகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் விழா நடைபெறும் இடம் முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு போலீசார் மைதானம் முழுவதும் தீவிர சோதனையை மேற்கொண்டனர். பார்வையாளர்களுக்கிடையில் பிரதமர் திறந்தவெளி வாகனத்தில் வருவதற்காக தார்த்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாநாடு நடைபெறக்கூடிய சூழலில், பல்லடம் நகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் செல்லவும், டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து, காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் உள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது.