ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் மீது அக்கறை இல்லாத மற்றும் தேசத்தின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.
ஐபிசியின் 120B, 121, 121A மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 18, 20 மற்றும் 38 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி மசின் அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ரஹ்மான், தனக்கு ஜாமீன் மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சீனிவாஸ் ஹரிஷ் குமார் மற்றும் விஜய்குமார் ஏ பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கூறியதாவது, “இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, அதன் இலட்சியங்கள், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும். இவை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமைகள் ஆகும்.
மேல்முறையீடு செய்தவர் இந்தியக் குடிமகனாக இருப்பதால், அவர் தனது கடமைகளைச் செய்யக் கடமைப்பட்டவர். ஆனால், அதற்குப் பதிலாக இந்தியாவுக்கு எதிராகப் போரை நடத்த சதி செய்யும் அமைப்பில் உறுப்பினராகி உள்ளார்.
இதை அடுத்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.