மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் நான்வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்துகொண்டே வந்தது.
இதனால் உ.பி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராதா யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். மரிசான் கேப் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
அருந்ததி மற்றும் அன்னாபெல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் உ.பி. அணி 119 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதை தொடர்ந்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மெக் லானிங் மற்றும் ஷாபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர்.
இதில் பல முறை இவர்களின் விக்கெட் கைக்கு வந்தும் உ.பி அணி அதை தவறவிட்டே வந்தது. இதனால் ஷாபாலி வர்மா அரைசதம் எடுத்தார்.
பின்னர் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாபாலி வர்மா களத்தில் இருந்தார். மறுமுனையில் இருந்த மெக் லானிங் 49 ரன்களுடன் இருந்தார்.
அப்போது ஷாபாலி வர்மா பந்தை அடிக்காமல் விட்டுவிட்டு மெக் லானிங்கினிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். மெக் லானிங் 2 ரன்கள் எடுத்து 51 ரன்னில் இருந்தார்.
அப்போது டெல்லி அணி 119 ரன்களில் இருந்தது. அந்த சமயத்தில் மெக் லானிங் அடித்த பந்து வரிந்தாவின் கைக்கு செல்ல அது கேட்ச் ஆகி மெக் லானிங் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஜெமிமா 4 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். ஷாபாலி வர்மா 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் டெல்லி அணி 14.3 வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது 5 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய மரிசான் கேப்பேவுக்கு வழங்கப்பட்டது.