சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 36 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்படுகிறது. இதனால், இங்கு 34.02 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை பயோ மைனிங் முறையில், ரூ. 350.65 கோடி மதிப்பில் அகற்றி வருகிறது.
இதேபோல, கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், 252 ஏக்கர் பரப்பளவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தில் குப்பைகளை எரிக்கும் எரிஉலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 27.06.2023 அன்று தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் குப்பை எரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்படையும் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், எனவே, குப்பை எரிஉலைகளை சென்னை மாநகரில் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.