திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், சைவ சமயகுரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கியுள்ளது.
ஆழித் தேரோட்ட விழாவையொட்டி, கொடி மரத்திற்கு பால், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, பஞ்சவாத்தியம் இசைக்க கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.
இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் 21 -ம் தேதி ஆயில்யம் நட்சத்திர தினத்தில் ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது.
ஆழித்தேரோட்டம் வழக்கமாக ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும். ஆனால், பல்வேறு காரணங்களால் கடந்த 28 ஆண்டுகளாக பல்வேறு நாட்களில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளை தொடர்ந்து 4-வது ஆண்டாக ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.