இந்தியாவில் ஆண்டு தோறும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினம் கருப்பொருள் அடிப்படையிலான அறிவியல் தொடர்பு நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
1986 ஆம் ஆண்டில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில் (NCSTC), பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
அதன்பிறகு, தேசிய அறிவியல் தினம் முதல் முறையாக பிப்ரவரி 28, 1987 அன்று கொண்டாடப்பட்டது. அப்போதிருந்து இந்த தினத்தை இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 28, 1928 இல், இந்திய இயற்பியலாளர் சர் சந்திரசேகர வெங்கட ராமன் தனது ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார்.
அதன் பிறகு அவர் 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார், “ஒளியின் சிதறல் மற்றும் அவரது பெயரிடப்பட்ட விளைவைக் கண்டுபிடித்ததற்காக” நோபல் பரிசு அமைப்பு அதனை வழங்கியதாக தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி ராமர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதால் தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
2024 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் :
“விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்” (Indigenous Technologies For Viksit Bharat). அதாவது, ‘உள்நாட்டுத் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியடைந்த பாரதமாக’ இந்த கருப்பொருள் உள்ளது.