ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனை அன்புடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
பொதுக்கூட்டம் முடிந்த பிறகு திருப்பூர் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி Cassandra Mae Spittman மற்றும் அவரது தாயார் சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடியின் முன் ‘அச்யுதம் கேசவம் ராம நாராயணம்’ எனும் பக்தி பாடலை பாடினார். அந்த பாடலை பிரதமர் மோடி அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு ரசித்து கேட்டார். மேலும், அந்த பாடகி பிரதமரிடம் ஒரு தமிழ் பாடலையும் பாடி அசத்தினார்.
“புவனங்கள் ஆளும் அண்ணாமலையே” எனும் அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடினார். இந்த பாடலை பிரதமர் மோடி கைகளை தட்டியவாறு ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.
இந்த காணொளியை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜெர்மன் பாடகியான கசாண்ட்ரா, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி, மொழி, தமிழ், உருது, பெங்காலி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடி வருகிறார்.
கடந்தாண்டு இவர் விஷ்ணு குறித்து பாடும் ஜகத் ஜானா பலம் என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை பாடி வெளியிட்டிருந்தார். இதை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு, பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனை அன்புடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” அன்புள்ள கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் இந்தியாவிற்கு வருக!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கசாண்ட்ரா மேனை அன்புடன் வரவேற்றதற்கு மிக்க நன்றி. கசாண்ட்ராவின் இளம் மற்றும் அழகான குரலில் இந்திய கலாச்சாரத்தின் மீதான ஜெர்மனியின் ஈர்ப்பைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.