மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள் சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது ஊழல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன.
இதையடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த வழக்கில் அவருடைய உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ஷாஜகான் தலைமறைவாக இருந்து வந்தார். இதனிடையே , கடந்த 26-ஆம் தேதி ஷாஜகான் ஷேக்யையும் இந்த வழக்கில் சேர்க்கும்படி கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அவரை கைது செய்யாமல் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், 55 நாட்களாக தலைமறைவாக இருந்த, ஷாஜகானை போலீசார் கைது செய்துள்ளனர். பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு நேற்று இரவு கைது செய்தது.
மாநில அரசுக்கு 72 மணி நேர காலக்கெடுவை ஆளுநர் வழங்கியிருந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.