இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 874-ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாநில வனத்துறையுடன் இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வனவிலங்குகள் நிறுவனம் சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது.
இதற்காக, சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள், வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 874-ஆக கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 907 சிறுத்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் ஆயிரத்து 985 சிறுத்தைகளும், கர்நாடகாவில் ஆயிரத்து 879 சிறுத்தைகளும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 70 சிறுத்தைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.