தமிழகத்தில் சாதாரண பேருந்துகளை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படுவதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, முக்கிய வழித்தடங்களில், சாதாரண பேருந்துகள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. இதனால், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், முறையான விளக்கம் தர மறுக்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் இளங்கோவன் ஆகியேர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு 4 மாதங்களில் போக்குவரத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும், அந்த பதிலில் திருப்தி இல்லையெனில் மேல் நடவடிக்கைக்கு செல்லாம் என உத்தரவிட்டனர்.