கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கோவில் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அறநிலையதுறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து கல்லூரிகள் துவக்குவது மற்றும் கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை எதிர்த்து சென்னை உயர்நிதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதில், புதிதாக கல்லூரிகள் துவங்க தடை விதித்தும் ஏற்கனவே துவங்கி நடக்கும் கல்லூரிகள் வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுபட்டது என்ற அடிப்படையில் தொடர்ந்து நடத்த அனுமதித்து சென்னை உயர்நிதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கோயில் நிலங்களில் அரசு நிதியை பயன்படுத்தி கல்லூரி கட்டபட்டிருந்தால் அத்தகைய நிலங்களை பயன்படுத்த நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது குறித்து அறநிலைய துறை மற்றும் மாநில அரசின் கருத்தை நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
வழக்கு விசாரனையின்போது கல்வி நோக்கத்துக்காக அரசு கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று கல்லூரி கட்டுவதால் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்படும் என்றும் கோயிலுக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் நடைமுறையில் மாறாக இருப்பதே கண்கூடு.
அந்த வகையில் இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகவேண்டும். கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள் அமைப்பது. கோயில் நிலத்தை வாடகைக்கு பெற்று அரசு செலவில் கல்வி நிறுவனம் அமைப்பது.
இதில் முதலாவதாக உள்ள கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவன்ங்கள் அமைப்பதன் மூலம் இந்து பக்தர்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் நடத்தபடும் கல்லூரிகளில் பிற மதத்தினரும் பயன்பெறுகிறார்கள். ஆனால் பிற மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்கள் மத மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதை போல கோயில் நிதியில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இந்துமதத்தை சார்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதில்லை
மேலும், அரசு நிர்வாகம் அல்லது அரசு கட்டுபாட்டில் உள்ள அறநிலையதுறையின் நிர்வாகம் என்ற அடிப்படையில் பிற மதத்தை சார்ந்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை அந்த கல்வி நிறுவனங்களில் நியமிப்பதன் மூலம் அவர்கள் மத ரீதியாக பாரபட்சமாக செயல்படுவதும் சர்ச்சைகளும் ஏற்கனவே திருக்கோயில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நடந்துள்ள நிலையில் கோயில் நிதியும் சொத்துகளும் பிற மதத்தினருக்கு மடைமாற்றம் ஆகும் என்ற வகையில் சிறிதும் ஏற்புடையதல்ல.
கல்வி அனைத்து தரப்புக்கும் கிடைக்க செய்வது அரசின் கடமை அதை ஒரு மத வழிபாட்டு தலங்களின் வருவாயை கொண்டு செய்வது பாரபட்சமானது என்பதுடன் அரசின் கடமையை கோயில் நிதியில் நிறைவேற்றுவது சிறிதும் ஏற்புடையதல்ல.
கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று அரசு நிதியில் கல்வி நிறுவனங்கள் அமைப்பது கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யபடுவது தடுக்கும் என்று நல்ல நோக்கத்தில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால், அரசின் கல்வி துறையும் அறநிலைய துறையும் எந்தளவுக்கு நியாயமான வாடகை நிர்ணயிப்பார்கள் என்பதும் வாடகை உரிய முறையில் நிலுவை இல்லாமல் செலுத்துவார்கள் என்பதும் உறுதி செய்யமுடியாது, அரசு துறைகள் என்ற அடிப்படையில் வாடகை செலுத்தபடாவிட்டாலும் ஒரு நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்ததில்லை.
ஏற்கனவே, பல அரசு அலுவலகங்கள் கோயில் நிலங்களை சொற்ப தொகைக்கு கையகபடுத்தி அமைக்கபட்டுள்ளது. அதன் மூலம் கோயில் நிலங்களை அரசே பறித்துகொண்டதும் கோயிலுக்கு சொற்ப வருவாயே கிடைத்துள்ளதும் வரலாறு.
அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் அவற்றை மீட்டு கல்வி நிலையங்களை அரசு நிலங்களிலேயே அரசு நிதியில் அமைக்கலாம். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உயர்நீதிமன்றம் பல கடுமையான உத்தரவுகள் பிறபித்தும் அவற்றை இதுநாள் வரையிலும் மாநில அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை, ஏராளமான சொத்துகள் மீட்கபடாமல் இருக்கிறது.
எனவே கோயில் நிலங்களை ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதை தடுக்கவும் விரைவாக மீட்கவும் எளிதான சட்ட நடைமுறைகள் கொண்ட சிறப்பு சட்டங்கள் உருவாக்குவது இப்போதைய அவசிய, அவசர தேவையாகும். மாறாக கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று அரசு செலவில் கல்லூரிகள் அமைப்பது கோயில் நிலங்களை அரசு அபகரிக்கவே ஏதுவாகும்.
ஏற்கனவே, உயர்நீதிமன்றம் கோவில் இடங்களை கோவில் உபயோகத்தை தவிர மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற வழிகாட்டுதலை தந்துள்ளது. கல்லூரி துவக்குவது நடத்துவது மாநில அரசின் கடமை. அதனை கோவிலின் மீது சுமத்துவது ஏற்க முடியாது.
எனவே, மாநில அரசும் அறநிலைய துறையும் கோயில் சொத்துகளின் பாதுகாப்பை பிரதானமாக கொண்டு சரியான முறையில் ஆலய சொத்துக்களை பாதுகாப்பது பராமரிக்க வேண்டிய தீர்வை நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவேண்டும். கோயில் சொத்துக்ளை பாதுகாப்பது மீட்பது குறித்து சிறப்பு சட்டங்களை உருவாகிட நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.