மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் ஏழாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது.
டெல்லி அணியில் ஷாபாலி வர்மா அரைசதம் எடுத்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.ஆலிஸ் கேப்ஸி 46 ரன்களும், மரிசான் கேப் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஜெஸ் ஜோனாசென் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக சோபி டெவின் மற்றும் நாடின் டி கிளர்க் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷ்ரேயங்கா படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இதில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி டெவின் களமிறங்கினர். இதில் சோஃபி டெவின் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஸ்ம்ரிதி மந்தனா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆனால் திடீரென அவர் ஆட்டமிழந்தார். அவர் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் எடுத்து மொத்தமாக 74 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மேகனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மரிசான் கேப் மற்றும் அருந்ததி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷிக்காக பாண்டே 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது டெல்லி அணியின் மரிசான் கேப்புக்கு வழங்கப்பட்டது.