இந்த ஆண்டு யூரியா மானியத்திட்டம், ஊட்டச்சத்து தொடர்பான மானியத் திட்டம் மற்றும் நேரடி மானிய பரிமாற்றத்திட்டம் போன்ற உரத்துறை தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரே தேசம், ஒரே உரம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தேவைப்படும் சரியான நேரத்திற்கு உரங்களை வழங்குதல் மற்றும் சந்தையில் எந்த வகையான உரங்களை வாங்குதல் என்பதில் விவசாயிகளுக்கு இருக்கும் குழப்பத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பிரதமரின் கிசான் சம்ரிதி கேந்திரா திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் சுமார் 600 சில்லறை விற்பனை நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயம் தொடர்பான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. பிரதமரின் உர மானியத் திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே உரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான உர மானியத்தை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.24,420 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.47.02, பாஸ்பேட் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.28.72, பொட்டாசியம் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.2.38, சல்ஃபா் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.1.89 மானியமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஏப்ரல் 1 -ம் தேதி முதல் செப்டம்பர் 30 -ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.