10-வது புரோ கபடி லீக் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தட்டி தூக்கியது புனேரி பல்டன் அணி.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தன.
இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இந்த தொடரில் இறுதிப்போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடின.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே புனேரி அணி முன்னிலை வகித்தது. எனினும், அதிக வித்தியாசம் இல்லாமல் பார்த்துக் கொண்டது ஹரியானா அணி.
அதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் போட்டியில் நிலைமை மாறலாம் என்ற பரபரப்பு நீடித்தது. முதல் பாதியின் முடிவில் புனேரி பல்தான் 13, ஹரியானா 10 புள்ளிகள் பெற்று இருந்தன. இரண்டாம் பாதியில் ஹரியானா அணியை ஆல் – அவுட் செய்தது புனேரி.
அதன் மூலம் கிடைத்த கூடுதல் இரண்டு புள்ளிகள் காரணமாக புனேரி அணியின் முன்னிலை வித்தியாசம் அதிகரித்து 7 புள்ளிகள் வரை சென்றது.
இந்த நிலையில் கடைசி 3 நிமிடங்களில் ஹரியானா ரெய்டுகளில் அனல் பறந்தது. எனினும், போட்டி நேர முடிவில் 28 – 25 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் 10-வது புரோ கபடி லீக் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தட்டி தூக்கியது புனேரி பல்டன் அணி. இதன் மூலம் முதல் முதலாக புரோ கபடி பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது புனேரி பல்டன்.