போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள குடோன் ஒன்றில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீசார் சுமார் 50 கிலோ போதை பொருளை கைப்பற்றினர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டினர்.
ஆனால் விசாரணைக்கு ஆஜராகாததால் அவர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக்கணக்குகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.