மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் ஒன்பதாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது.
இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 44 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் ஜார்ஜியா வேர்ஹாம் 27 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். மோலினக்ஸ் 12 ரன்களிலும், மேகனா 11 ரன்களிலும் ஆட்டமிழக்க ஸ்மிருதி மந்தனா 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
மும்பை அணியில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மற்றும் பூஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இஸ்ஸி வோங் மற்றும் சைகா இஷாக் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா மற்றும் ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர்.
இதில் யாஸ்திகா 31 ரன்களும், ஹேலி மேத்யூஸ் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய நாட் ஸ்கிவர் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய அமெலியா கெர் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் பூஜா 8 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சோஃபி டெவின், ஜார்ஜியா மற்றும் ஸ்ரேயங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.