வரும் நாட்களில் எல் நினோ தாக்கம் காரணமாக கோடையில் இயல்பை விட அதிக வெப்பம் அலை வீசும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக புடெல்லியில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், நமது நாட்டில் எல் நினோ தாக்கம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக கோடை காலத்தின் போது இயல்பை விட அதிக வெப்பம் அலை வீசும்.
வடகிழக்கு தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் அதிக வெப்ப அலை வீசும். எனினும், வட மற்றும் மத்திய பகுதிகளில், இந்த மாதம் வெப்ப அலையை எதிர்பார்க்க முடியாது.
இதேபோல், மார்ச் மாதம் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு பதிவாகவும் வாய்ப்பு உள்ளது. சராசரியாக 3 செ.மீ. மழை பதிவாகும் நிலையில், 117 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பசிபிக் பெருங்கடலில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக, நம் நாட்டில் கோடை காலம் முழுதும் எல் நினோவின் தாக்கம் இருக்கும் என தெரிவித்தார்.