சென்னையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டியும், விழா நடைபெறும் இடத்தை சுற்றியும் உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வணிக வாகனங்கள் சாலைகளில் தடை செய்யப்படும். அதன்படி, மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரையும், இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையும், மவுண்ட் பூன்னமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையும், அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரையும், விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரையும், அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரையும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலைகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.