இந்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக இந்திய டேபிள் டென்னிஸ் அணி தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தென் கொரியாவின் புசான் நகரில் கடந்த மாதம் டேபிள் டென்னிஸ் உலக அணிகள் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இது வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றுப் போட்டியாக அமைந்திருந்தது.
இந்த தொடர் முடிவடைந்த நிலையில் அணிகள் பிரிவில் 7 இடங்கள் மீதியிருந்தது. இவை தற்போது தரவரிசையின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் மகளிர் அணிகள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்தியா, 12-வது இடத்தில் உள்ள போலந்து,15-வது இடத்தில் உள்ள சுவீடன் மற்றும் தாய்லாந்து ஆகிய 4 அணிகளும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள் பிரிவில் உலகத் தரவரிசையில் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ள இந்தியா பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.
அதேபோல் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா, 11-வது இடத்தில் உள்ள ஸ்லோவேனியா ஆகிய 3 அணிகளும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று இருக்கின்றன என்று சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் அணிகள் பிரிவு 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்திய அணிகள் தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் இந்திய டேபிள் டென்னிஸ் அணி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.