இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடுகளின் தன்னாட்சியையும், இறையாண்மையையும் இந்தியா பாதுகாக்கிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கோவா கடற்படை போர்க் கல்லூரியில் புதிய நிர்வாக மற்றும் பயிற்சி கட்டிடத்தை இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்த நவீன கட்டிடத்திற்கு பழங்கால இந்தியாவின் சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடல்சார் ஆட்சிக்கு மரியாதை செலுத்தும் வகையில், சோழா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகளுடன் இந்தியாவின் கடல்சார் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில், கட்டிடத்தை அமைத்ததற்காக கடற்படையைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கடல்சார் திறன் மற்றும் கடற்படையின் சின்னமாக இந்த சோழா கட்டிடம் திகழ்கிறது என்று கூறினார்.
அடிமை மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும் என்ற இந்தியாவின் புதிய மனநிலையின் பிரதிபலிப்பாகவும், நமது செழுமைமிக்க வரலாற்று பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் இக்கட்டிடம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடுகளின் தன்னாட்சியையும், இறையாண்மையையும் இந்தியா பாதுகாப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் வளரும் சக்தி ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்லாமல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளமையையும் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.