2023-24-ஆம் ஆண்டில், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரீமியத்தின் அடிப்படையில் உலக அளவில் மூன்றாவது பெரிய காப்பீட்டுத் திட்டமான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது. தற்போது வரை, விவசாயிகள் பிரீமியத் தொகையாக ரூ.31,139 கோடி செலுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு இழப்பீடாக தற்போது வரை ரூ.1,55,977 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாய் பிரீமியத்துக்கும், அவர்களுக்கு சுமார் ரூ.500 இழப்பீட்டுத் தொகையாகக் கிடைத்துள்ளது.
2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் விண்ணப்பங்கள் எண்ணிக்கை முறையே 33.4 சதவீதம் மற்றும் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2023-24-ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையில் இதுவரை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் என்பது அசாதாரண சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து உற்பத்தியை அதிகரிக்க செய்தல், தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்யவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது.
அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.