மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் அதிவேகமாக பந்துவீசி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 12வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்திருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் ஷப்னிம் இஸ்மாயில் 132.1 கிமீ வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்து இருக்கிறார் ஷப்னிம் இஸ்மாயில்.
முன்னதாக இவர் 2016இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 128 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்து அப்போது மகளிர் கிரிக்கெட்டின் அதிவேக பந்தாக இருந்தது. அதன்பின் 2022 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கிமீ வேகத்துக்கும் அதிகமாக பந்து வீசி இருந்தார்.
தனது 128 கிமீ சாதனையை 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் முதன்முறையாக 128.3 கிமீ வேகத்தில் பந்து வீசி முறியடித்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒரு முறை தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.