புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறுமியfன் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி , தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரெனக் காணாமல் போனார். இதனால் சிறுமியின் பெற்றோர், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சோலை நகரில் சிசிடிவி கேமிரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், சோலைநகரில் சாக்கு மூட்டையில், காணாமல் போன சிறுமி சடலமாகக் கிடந்தார். மேலும், சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பரவியதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பதற்றம் நிலவியது. இதனால், கும்பலைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்படுகிறது. பாப்பம்மாள் கோவில் சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என்றும், சிறுமி குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் காரணமாக, புதுச்சேரியில் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு கருதி முக்கியப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.