உலகப் புகழ் பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். தென்னிந்தியாவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ரன்னி-பெருநாடு பகுதியில், சபரி மலையின் மீது, அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்தக் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது.
வருடத்தில் 127 நாட்கள் மட்டுமே இந்த கோயில் திறந்திருக்கும். பம்பை வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் என்பதால், வனப்பகுதியில் கடினமான பாதைகள் வழியாகக் கோவிலுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதனால், இந்த கோவிலுக்குப் பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில், பங்குனிமாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 13-ம் தேதி திறக்கப்பட உள்ளது. பங்குனி மாத பூஜை மார்ச் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். பங்குனி ஆறாட்டுத்திருவிழா 16-ம் தேதி துவங்குகிறது.
ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என்றும், பக்தர்கள் நலன் கருதி நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.