அமலாக்கத்துறையின் புதிய புகார் தொடர்பாக மார்ச் 16ஆம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இதில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார். இதனையடுத்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அமலாக்கததுறை வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. பட்ஜெட் உள்ளிட்ட பணிகள் உள்ளதாக கூறி வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட பல சம்மன்களை புறக்கணித்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது.
இதுதொடர்பான விசாரணைக்கு வரும் 16ஆம் தேதி அஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார்.