சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 5,050 பெண் போலீசார் ஒரே நேரத்தில் திரண்டு உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையில், 5,050 பெண் போலீசார் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ஒரே நேரத்தில் கூடினர்.
இதனைத் தொடர்ந்து, பெண்கள் உதவி மைய எண் 1091 மற்றும் 181, குழந்தைகள் உதவி மைய எண் 1098 ஆகிய எண்களின் வடிவத்திலும் மற்றும் நிர்பயா பெண்கள் பாதுகாப்பு திட்டமான அவள் மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றின் எழுத்துகள் வடிவிலும் நின்று பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஒரே நேரத்தில் 5,050 பெண் போலீசார் ஒன்று கூடி விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியை ‘வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன்’ என்ற அமைப்பு உலக சாதனையாக அறிவித்துள்ளது. மேலும், இந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ஷெரிபா, உலக சாதனை நிகழ்ச்சிக்கான சான்றிதழை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கி, பாராட்டினார்.
இது தொடர்பாகப் பேசிய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் சென்னை பெருநகரம் முதலிடம் வகிக்கிறது. சென்னையில் உள்ள போலீசாரில் 26 சதவீதம் பேர் பெண்கள். இது நாட்டிற்கே பெருமையான விஷயம் என்றார்.