கேரளாவில் புத்தொழில், தகவல் தொழில் நுட்பத்துறை, மின்னணு துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், திருவனந்தபுரம், கொச்சியில் 2 இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்காவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு தொழில் காப்பகத்தை அவர் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், எதிர்வரும் பாரத் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு பிராந்திய மையத்தைக் கொண்டிருக்கும். இது நகரத்தின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிக்கும்.
இந்த மையங்கள் கேரளாவின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வலுப்படுத்தும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப தொடக்கங்களுக்கு அதிநவீன வசதிகளை வழங்கும். அதன் மூலம் உலக அளவில் புதுமைகளைப் புகுத்தவும், போட்டியிடவும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.