ஏடன் வளைகுடா பாதையில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் நடத்திய திடீர் வான்வழி தாக்குதலில், 3 மாலுமிகள் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக, முக்கிய வர்த்தக பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் கூட்டுப்படை, ஹவுதி தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இருந்தபோதிலும், ஹவுதி தீவிரவாதிகள் அதைக் கண்டு கொள்ளாமல், செங்கடலில் வரும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஏடன் வளைகுடா பாதையில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தீடீர் தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், கப்பல் கடுமையாக சேதமடைந்தது. இந்த தாக்குதலில், 3 மாலுமிகள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பதற்றம் அதிகரித்துள்ளது.