பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் உறுப்பினரான முகமது காசிம் குஜ்ஜாரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தீவிரவாதி என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜார் என்ற தீவிரவாதி பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி உள்ளார். இதனால், பல உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத சதி திட்டங்களை செய்துள்ளார்.
தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது இரக்கமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள அங்கராலாவில் வசிக்கும் 32 வயதான முகமது காசிம் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். நாட்டிற்கு எதிராக பல்வேறு தீவிரவாத சதித்திட்டங்களை தீட்டியுள்ளார்.
தீவிரவாதத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய தளங்களை பயன்படுத்தி, தீவிரவாதத்திற்கு ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், 1967 சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் மூலம் அவரை ஒரு தீவிரவாதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.