குவாரிகளில் மணல் அள்ள தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பாற்றில் மணல் அள்ள தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த சமாதானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரியூரில் பாம்பாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் குறிப்பிட்ட அளவு ஆற்று மணல் எடுக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அரசு அனுமதி வழங்கியுள்ளதைக் காட்டிலும் 104 ஏக்கரில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே, கனிம வளங்களைப் பாதுகாக்க அரசு வகுத்துள்ள விதிகளை மணல் ஒப்பந்ததாரர்கள் காற்றில் பறக்கவிட்டு, கூடுதலாக மணல் அள்ளுவதாகத் தெரிவித்தார்.
எப்போது எல்லாம் முறைகேடு நடக்கிறதோ அப்போது எல்லாம் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் போடுகிறது. ஆனால், அதனை அதிகாரிகள் செயல்படுத்துவது இல்லை. எனவே, அதிக அளவு மணல் அள்ளுவதைத் தடை செய்ய வேண்டும் எனத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மணல் குவாரிகளில் தனியாருக்கு மணல் அள்ள ஒப்பந்தம் வழங்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.