பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்தியப் பெண்களுக்கு ஓர் இனிப்புச் செய்தியாக , 300 ரூபாய் சிலிண்டர் மானியத்தை மார்ச் 2025 வரை நீட்டிக்கவும் , அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 4% உயர்த்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) மானியத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.
14.2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு உயர்த்தியது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு 14.2 கிலோ சிலிண்டருக்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வழங்கப் பட்டு வந்த மானியத்தால் ஏறக்குறைய 10 கோடி குடும்பங்கள் பயனடையும் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியின் (டிஏ) கூடுதல் தவணையை அளிக்கவும்,மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலை நிவாரணமும் (DR), , அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகரித்து அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.