விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் இரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படாது என தென்னக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜானகிபுரம் ரயில்வே கேட் மார்ச் 15 -ம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படும் என தென்னக இரயில்வேயின் திருச்சி டிவிஷனைச் சேர்ந்த அதிகாரிகள் அறிவித்தனர். இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
காரணம், இந்த கேட்டை அடைத்தால், மரகதபுரம், கண்டம்பாக்கம், ஜானகிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள மாணவர்கள், கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியாது.
மேலும், கோலியனூர் பகுதி மக்கள் பிரசவம் உள்ளிட்ட சுகாதாரத் தேவைகளுக்குக் கண்டமானடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் செல்ல முடியாது. இவர்கள் அனைவருமே ஜானகிபுரம் இரயில்வே கேட் வழியாகத்தான் மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.
அத்துடன், கண்டமானடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், தபால் நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி முதலான வசதிகள் கண்டமானடி பகுதியில் உள்ளதால் இந்த கேட்டை நிரந்தரமாக மூடக்கூடாது என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், ஜானகிபுரம் இரயில்வே கேட்டை மூடும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக திருச்சி டிவிஷன் இரயில்வே மண்டல பொறியாளர் மீனா தெரிவித்துள்ளார்.