ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவர், ஆப்ரேட்டர், கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். டிரைவர் முதல் கட்டுமான பணிகள் வரை பல்வேறு வேலைகளில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், பல லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு திட்டத்தின் கீழ் மட்டும் காப்பீடு செய்து வருகின்றன.
இந்த காப்பீடு திட்டங்களின் மூலம், வேலை செய்யும் போது, காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்கள் ஏற்பட்டால், எந்தவொரு இழப்பீடும் கிடைக்காது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த முறைசாரா தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
துபாயில் உள்ள இந்திய தூதரகம், அங்கு உள்ள காப்பீடு வழங்குபவர்களிடம் பேசி, இயற்கை மரணங்களுக்கும் இழப்பீடு வழங்கும் வகையில், ஆயுள் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் இந்திய தொழிலாளர்களுக்கு இந்த ஆயுள் காப்பீடு கிடைக்கிறது.