வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால், பொன்முடி, அமைச்சர் பதவியை இழந்தார்.
இதேபோல, பொன்முடியின் மனைவி விசாலாட்சியும் குற்றவாளி என்று அவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனிடையே, திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு, அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் பொன்முடி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மார்ச் 18 -ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, மார்ச் 11 -ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.