போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் விஷயத்தில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் பேட்டி துரதிருஷ்டவசமானது என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் நடமாடும் நிலையில், திமுக ஐடி விங் சார்பில், குஜராத் மாநிலத்தில்தான் அதிக பொருட்கள் உள்ளதாக திசை திருப்பும் வேலை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அதற்கு சற்றும் சளைக்காமல், தமிழக டிஜிபியின் பேட்டியும், திமுக அரசை காப்பாற்றும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் விஷயத்தில் தமிழக அரசு நிலைத் தடுமாறியுள்ளது.
இந்த நிலையில், காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலின் பேட்டி துரதிருஷ்டவசமானது. திமுக தன்னை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
மேலும், டிஜிபியின் பேட்டி அளித்த விதம் திமுகவினர் எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ என் எண்ணத் தோன்றும் வகையில் திமுகவின் கருத்துக்களாகவே இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை இயக்குநர் பேட்டியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. போதைப் பொருள் வழக்கு என்பது சட்டவிரோதம் மற்றும் சமூகவிரோத குற்றம் என்பதை காவல்துறை உணர்ந்துள்ளதா?
பிடிபட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு குறித்து அவர் பேசியது ஜாபர் சாதிக்கை காப்பாற்றவா? இல்லை இச்சம்பவம் அவ்வளவு பெரிய பிரச்சினையல்ல என்று பூசி மொழுகவா? ஜாபரின் முந்தைய வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறுகிறார்.
சமூக குற்றம் புரிந்தவரை கண்காணிப்பில் வைக்க வேண்டியது காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கடமையாக இருக்கும் போது தலைமறைவாக இருக்கும் சாதிக் ஜாபர் மற்றும் அவரது தம்பியின் மறைவிடங்கள் காவல்துறைக்கு தெரியாதா?
டெல்லி போதை தடுப்பு பிரிவு பிடிக்கும் வரை, தமிழக காவல்துறை ஜாபர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆளும்கட்சி குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லையா?
தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக், காவல்துறைக்கு கொடுத்த பத்து சிசிடிவி கேமராவை திருப்பி கொடுத்ததாக டிஜிபி கூறுகிறார். தலைமறைவாக உள்ளவரிடம், அவரது வீடு மற்றும் அலுவலகம் மத்திய புலனாய்வு துறையால் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாரிடம் திருப்பி கொடுத்தார்கள் என்பதை தெளிவுபடுத்துவாரா?
சிசிடிவி நன்கொடை அளிப்பவர் யார் என்று கூட அறியாமல் நினைவு பரிசு அளித்து போட்டோவிற்கு போஸ் கொடுக்க காவல்துறை அதிகாரி ஒன்றும் அரசியல்வாதி இல்லையே.
இப்படிப்பட்ட புகைப்படத்தால் அதனை தவறாக பயன்படுத்தி குற்றச்செயல் செய்பவர் காவல்துறையின் கண்களிலிருந்து தப்பிக்க வழி வகுக்கும் என்பதை அறியவில்லையா?
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப் பொருள் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் தக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததை இவரது பேட்டி ஊர்ஜிதப்படுத்துகிறதே.!
தெருவில் கஞ்சா விற்கும் சில நூறு பேரை கைது செய்துவிட்டு கடுமையாக நடவடிக்கை எடுத்ததாக காவல்துறை பேசுவது மக்களின் கோபத்தை திசை திருப்ப தானா?
தமிழக அரசு போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு முயற்சிக்கிறதோ என்ற குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கிறது தமிழக டிஜிபியின் பேட்டி என்பதில் சந்தேகமில்லை.
குஜராத் துறைமுகத்தில் போதை பொருள் பிடிபடுகிறது என பேசும் திமுகவினர், அவர்களை அறியாமலேயே தமிழக காவல்துறை போதை பொருள் கடத்தல்காரர்களை பிடிப்பதில் அலட்சியமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆட்சியாளர்களின் கைப்பாவையாக காவல்துறை அதிகாரிகள் இல்லாமல் சட்டத்தின் காவலராக நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
போதைதான் அனைத்து குற்றங்களுக்கும், விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. நமது நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது அதனை நாசமாக்கவே போதை பொருள் பரவலாக்கப்படுகிறது.
சென்னை உட்பட பல நகரங்களில் பல மாதங்களாக ஹேப்பி ஸ்டிரிட் என்ற பெயரில் ஞாயிறு தோறும் தெருவில் கூத்தடிக்கும் கும்பல் பெருகி வருகிறது. அதேபோல் ரேவ் பார்டி என்பதும் பெருகி வருகிறது. இவர்களின் பின்புலம் போதையின் அஸ்திவாரமாக இருக்கலாம். ஆனால் இந்த கலாச்சார சீரழிவுக்கு திமுகவும் அதன் அமைச்சர்களும், ஏன் காவல்துறை அதிகாரிகளும் கூட உடந்தையாக உள்ளனர்.
வேலை வெட்டிக்கு போகாமல் ஊதாரிகளாக ஊர் சுற்றும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை அடையாளம் கண்டு போதைக்கு அடிமையாக்க இது ஒரு தந்திரம் தான் ரிசார்ட் போதை பார்டி.
இதன் மூலம் சினிமா துறையினர், ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். பல முறை போதை பார்டி சம்பந்தமாக செய்திகள் வந்தாலும் ஆளும்கட்சி தொடர்பால் மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் ஊடகத்தின் மூலம் தெரிய வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது செய்திகள் சேகரிக்க செல்கின்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுகின்றனர் . சென்னையில் ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டதோடு அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது என்பதை மறுக்க முடியாது.
எனவே, காவல்துறை அதிகாரிகள் தங்கள் துறையின் கண்ணியத்தை காத்திட வேண்டும். அரசியல்வாதிகள் வாழ்வு நிலையற்றது. ஆனால் சமூகத்தின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு காப்பதில் காவல்துறையின் பங்கு இனிறியமையாதது என்பதால் மிகுந்த ஈடுபாடுடன் காவல்துறை செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பகடைக்காயாக காவல்துறையின் சொல்லும் செயலும் அமைந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.
தெருவில் அகப்படும் குற்றவாளிகள் சில நூறு பேரை பிடித்தோம் என்பதை காட்டிலும் போதை பொருள் சம்பந்தப்பட்ட முழு சங்கிலித் தொடரையும் பிடித்து இன்றைய தமிழகம் ஆனது போதையில்லா தமிழகமா மாறும் அளவிற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.