சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பெண்களுக்கென பிரத்யேகமாக இரண்டு தேசிய சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ள 23 விளையாட்டுகளில் இந்த தேசிய சிறப்பு மையங்கள் கவனம் செலுத்தவுள்ளது.
மாநில அளவில் பயிற்சியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை குறித்து பெங்களூருவில் பேசிய அனுராக் தாக்கூர், “விளையாட்டு என்பது மாநிலங்களின் வரம்பிற்குள் வருவது, இருந்தும் நாட்டில் விளையாட்டை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சியாளர்களுக்கு நாங்கள் நிறைய செலவிட வேண்டும். நாங்கள் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மூன்று முக்கிய விளையாட்டுகளை அடையாளம் காணுமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம், இதனால் ஹாக்கி, குத்துச்சண்டை மற்றும் தடகளம் போன்றவற்றை எந்த மாநிலம் ஊக்குவிக்கும் என்பதற்கான தகவல்கள் எங்களிடம் உள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர், ” நான் ஏற்கனவே இந்த தேசிய சிறப்பு மையங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளேன் என்றும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடன் இணைந்து, நல்ல பயிற்சியாளர்களை உருவாக்குவதில் அதிக நிபுணத்துவம் பெறுவோம்” என்றும் அனுராக் தாக்கூர் கூறினார்.
இந்திய விளையாட்டு ஆணையம் நாடு முழுவதும் 23 தேசிய சிறப்பு மையங்களை நிறுவியுள்ளது. இம்மையங்கள், நம்பிக்கை அளிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு அறிவியல் துணை உபகரணங்கள், பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட தனிப்பட்ட உணவுகள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள், தகுதி வாய்ந்த உதவிப் பணியாளர்கள் மற்றும் உயர் செயல்திறன்மிக்க இயக்குநர்களின் கீழ் ஒட்டுமொத்த மேற்பார்வை ஆகியவை வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.