போதைப் பொருள் கடத்தல் வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை, தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனிடையே, கடந்த 15-ம் தேதி, மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் மற்றும் விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.
இதில், கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது, தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று தெரிய வந்தது. இதனையடுத்து, ஜாபர் சாதிக் மீது டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்கிற்கு சம்மன் அனுப்பினர். அவர் வீட்டில் இல்லாததால், அவரது வீட்டின் முன்பு உள்ள கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனையடுத்து, ஜாபர் சாதிக்கை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக்கை, டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.